தஞ்சாவூர் என்றாலே நினைவுக்கு வரும் 
 சலசலக்கும் காவிரியும் தென்னந்தோப்புகளும்
 தலையாட்டி பொம்மையும்,  ஆங்காங்கே தெரியும் கோவில்களும்..
 ஆனால் , வெளியே தெரியாமல் இந்த மண் செய்த வேலை தெரியுமா?
 மறைந்து இருந்து சங்கீத உலகை பார்க்கும் இந்த ஜில்லாவிற்கு தான்
  எத்தனை அமைதி!எத்தனை அழகு!!
 'சரிகம பதநிஸ' என்று தொடங்கும் சங்கீதத்திற்கு இந்த மாவட்டம் செய்த
 தொண்டுகளையும் ஆற்றிய பணிகளையும் சொன்னால் இந்த சிறுகட்டுரை இடம்பெறாது.

 கொஞ்சும் சலங்கை படத்தில் ஒலித்த சிங்காரவேலனே தேவா..
 என்ற பாடலை நாம் முனுமுனுக்கும்போது கூடவே அந்த பாடலுடன் ஒலித்த
 நாதஸ்வர ஓசையையும் நமது உதடுகள் முனுமுனுக்காமல் இருப்பதில்லை.
 அந்த பாடலுக்கு வாசித்தவர் நம்ம காருக்குறிச்சி  என்றாலும்,
 அவருக்கு குருவாக இருந்தவர் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை என்றால் மிகையல்ல.
 அட அவர் மட்டுமா இங்கே பிறந்தார்?!
நம்ம மகாரஜபுரம் சந்தானம், செம்மங்குடி சீனிவாசய்யர்,
 கும்பகோனம் ராஜன்னா, பந்தனல்லூர் தட்ஷீனாமூர்த்தி,
 கொக்கு காதர்பாட்சா, அட இவ்வளவு ஏன்?
 நம்ம தியாகராஜர் வாழ்ந்தது எங்கே?
நம்ம முத்துசாமி தீட்சிதர், பாப நாசம் சிவன்,
 அது போவுது போங்க..
 இந்த மண்ணில் பிறந்த, உருவான இசைமேதைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல.
  கர்னாடக சங்கீதம் என்றாலே பயப்படும்படியாக ஒன்றும் இல்லை.
 இது மைசூரில் இருந்தோ பெங்களூரில் இருந்தோ வந்ததும் அல்ல.
 அது நமது காதுக்கு அடக்கமானது இனிமையானது. அவ்வளவுதான்.
இதில் அளவுக்கு அதிகமான கீர்த்தனைகள்
 தெலுங்கில் இயற்றியுள்ளதால் நமக்கு புரிவதில்லை.
 தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்போது
 நிறைய பாடல்கள் பாடிவருகிறார்கள்.

 உதாரனமாக 'மரி..மரி.. நின்னே.. சிந்துபைரவியில் 
 பாடறியேன் படிப்பறியேன் என உருமாறியது..
நிழல்கள் படத்தில் ஒலித்த 
 பூங்கதவே தாழ்திறவாய் பாடல்
 சுத்தமத்யம ராகங்களில் ஒன்றான
 மாயமாளவ கெளளை ராகத்தில் ஒலித்தது தான்.
இதில் முக்கியமானது மேளகர்த்தா ராகங்கள் ஆகும்.
 இதில் மொத்தம் 72 ராகங்கள் உள்ளது.
 அதில் இருவகைப்படும்
 1)ப்ரதிமத்யம ராகங்கள்
 2)சுத்தமத்யம ராகங்கள்
 இதில் மிக இலகுவான ராகமும் இசைப்பயிலும் போது
 நமக்கு முதலில் சொல்லிக்கொடுப்பதும் மாயமாளவ கெளளை தான்.
 இதில் சுத்த தன்யாசி போல பாடுவதற்கு மிக கடினமான ராகங்களும் இருக்கிறது.
தெலுங்கில் அதிகமான கீர்த்தனைகளை தியாகராஜரும்,
 பாபனாசமும், முத்துசாமியும் இயற்றியுள்ளனர். 
 தஞ்சையில் பிறந்த இசைமேதைகளை அத்தனை சீக்கிரம் சொல்லி விட முடியாது.
 எத்தனை எத்தனையோ வித்வான்கள்.. எவ்வளவோ இசைமேதைகள்..
 அன்றைய காலங்களில் நிலாப்பொய்கைகளிலும், பூந்தென்னல்களிலும்,
 பனிபடர்ந்த இரவுகளிலும் ..மேடைகளிலும் அம்பலங்களிலும் இவர்கள்
 பொழிந்த இசை அமுதத்திற்கு அளவே இல்லை.

 எத்தனையோ கீர்த்தனைகள் .. அநாசயமான பிருகாக்கள்
 குரல் என்பது கடவுள் கொடுத்த வரம்
 அதை சாதகம் பன்னுவதின் மூலம் நாம் மெருகூட்டிக்கொள்கிறோம்.
சங்கீதத்தில் அதீத பற்று வைத்திருக்கும் எவ்வளவோ பேர்
 இன்னும் இந்த மண்ணின் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள்.
 அந்தக்காலத்தில் மலைக்கோட்டை கோவிந்தசாமிபிள்ளை 
 திருவையாறுக்கு குதிரைவண்டியில் வருவாராம். ஆனால், திருவையாறு
 பாலத்தினருகே வண்டியை நிறுத்திவிட்டு  ஊருக்குள்ளே கால் நடையாகத்தான் வருவாராம்.
 காரனம் தியாகராஜர் வாழ்ந்த அந்த ஊரின் மேல் அவ்வளவு பாசம்.
 இன்றும் தஞ்சையில் நாம் பயணம் செய்யும் காலங்களிலும்,
 அந்த மக்களிடம் நாம் பழகும் போதும்,
 அவர்களின் வாழ்வில் சங்கீதமும், கலையும் கலாச்சாரமும்
 அவர்களோடு கலந்திருப்பதை நம்மால் உணராமல் இருக்கமுடியவில்லை.
 சங்கீத தஞ்சை என்றும் மறவாத பசுமையான நினைவுகளில்...