இயற்கை கண் இமைத்தால் கூட போதும் மனித இனம் துவண்டுவிடுகிறது. சுனாமிகளும், புயல்களும், நில நடுக்கங்களும், சென்ற 10 ஆண்டுகளில் மிக அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது. இந்த இடர்களும் உலகமயமாகிவிட்டது என்பதை மறந்து இன்னமும் பொருளாதாரத்தின் உச்சியில் இருக்கும் நாடுகள் இந்த சுழல் மாறுபாட்டை உணர மறுத்து செயல்படாமல் லாப நஷ்ட கணக்கையும், போட்டி மனப்பான்மையுடன் மற்ற நாடுகளை குறை கூறுவதும், நிர்பந்தம் செய்வதும் வருகின்ற சமுதாயதிற்கு நாம் செய்யும் துரோகம் என்பதில் ஐயமில்லை.
பார்க்கும் பொழுதெல்லாம் மனதை கவரும் “கேத்தி பள்ளதாக்கு” இந்த வருட வடகிழக்கு பருவ மழையில் மண் சரிவினால் மக்களுக்கு பெரும் துன்பத்தை தந்துள்ளது. நீலகிரி மாவட்டமே சோகத்திலுள்ளது.
தமிழகத்தில் குறிபிட்ட இடத்தில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை கேத்தியில் பதிவான 820mm என பத்திரிகைகள் கூறுகின்றன. 10 கி.மீ தள்ளியுள்ள உதகை 190mm, குன்னூர் 310mm கோத்தகிரி 270mm, என்ற அளவில் மழை பெய்துள்ளது. தமிழகத்தின் சராசரி வருட மழையளவு சுமார் 950+ mm என்பதை மனதில் கொள்ளவும்.
இயற்கை தென்இந்தியாவிற்கு தந்த பரிசான வெட்டிவேர் இந்த பாதிப்பை கணிசமான அளவிற்கு நிச்சயம் குறைத்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. உலகிலுள்ள அனைத்து மக்களும் இதனை “வெட்டிவேர்” என்ற தமிழ் பெயரில்தான் அழைக்கிறார்கள் என்பது வியப்பளிக்கலாம். உலகில் 100 நாடுகளுக்கு மேல் பல்வேறு காரணங்களுக்கு வெட்டிவேரை பயன்படுத்தினாலும் மண் அரிப்புக்கு நம் தென்இந்திய வெட்டிவேரைத்தான் அனைவரும் பயன்படுத்துகிறார்கள் என்பது நமக்கு பெருமைதான். இந்த புல்லிற்காக வலையமைப்பை ( http://www.vetiver.org/ )உருவாக்க பொருளுதவி தந்து ஊக்கம் அளிப்பது தாய்லாந்து நாட்டின் மன்னர் குடும்பம். ஆனால் அதனைப் பற்றி நாமே தெரிந்து கொள்ளாமல், பயன்படுத்தாமல், பேரிடர் வரும் போது கஷ்டப்படுவது யார் குற்றம்? அலசி ஆராய்வதை விடுத்து ஆக்கப் பூர்வமாக செயல்படுத்தினால் வருங்காலத்திலாவது இழப்புக்கள் தவிர்க்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக