புதன், 25 பிப்ரவரி, 2009

போர் நிறுத்தம்: யுஎஸ்-ஐ.நா-ஐரோப்பிய யூனியன் கோரிக்கை


வாஷிங்டன்: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் போரை உடனடியாக நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என அமெரிக்கா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை தனித் தனியாக கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை போர் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தற்காலிக செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட் கூறுகையில், இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் போரை கைவிட்டு விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.

மனித உரிமை மீறல்களும், மனிதாபிமான சிக்கல்களும் எங்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

அகதிகளாக இடம் பெயர்ந்து தங்கியிருக்கும் மக்களின் நிலை பெரும் கவலைக்குரியதாக மாறியுள்ளது. அவர்களுக்கு நடைபெறும் இன்னல்கள் எங்களை கவலையில் ஆழ்த்துவதாக உள்ளன. இரு தரப்புக்கும் இடையில் சிக்கி பெரும் துயரத்தில் அவர்கள் மூழ்கியுள்ளனர்.

இரு தரப்பும் அரசியல் ரீதியிலான தீர்வுக்கு முயற்சிக்க வஏண்டும். பல்வேறு நாடுகள் பரிந்துரைத்துள்ள சமரச முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு பார்க்க வேண்டும்.

இரு தரப்பும் உடனடியாக போரை கைவிட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். அப்பாவி பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். போர்ப் பகுதியிலிரு்நது அவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மனிதாபிமான உதவிகள், நிவாரணங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

இரு தரப்பும் தங்களது சண்டையைக் கைவிட வேண்டும் என்பதே எங்களது ஒரே வேண்டுகோள். இந்தப் பிரச்சினைக்கும், அங்கு தற்போது நடைபெற்று வரும் சிக்கல்களுக்கும் முடிவு காணப்பட வேண்டும். இரு தரப்பும் பேச வேண்டும்.

இலங்கைக்கான அமெரிக்க தூதரும், வெளியுறவு அமைச்சகத்தின் தெற்காசிய பிரிவும் இதுதொடர்பாக இலங்கை அரசுடன் தொடர்புகள் கொண்டுள்ளன. மேலும் சில சர்வதேச நாடுகளும் கூட இதுதொடர்பான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த வருமாறு அமெரிக்காவுக்கு இதுவரை யாரும் அழைப்பு விடுக்கவில்லை.

போர் முடிவுக்கு வர அமெரிக்காவால் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். ஆனால், முடிவு ஏற்படுவது சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கும் இடையில்தான் உள்ளது. போரை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது, பேச்சுவார்த்தைகளை எப்படித் தொடங்குவது என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் உட்.




ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தல்

இதேபோல ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. அங்கு உருவாகியுள்ள மனித அவலங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

பொதுமக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்கு போரில் ஈடுபடும் இரு தரப்பும் அனைத்துலக மனிதாபிமான விதிகளையும், போரியல் விதிகளையும் மதித்தல் வேண்டும். சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இதனை மதிக்க வேண்டும்.

வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் மக்களை வெளியேறவிடாது தடுப்பது கண்டனத்திற்கு உரியது.

வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு வரும் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் சோதனைகள் அனைத்துலகத்தின் தராதரத்துடன் இருத்தல் வேண்டும் என்பதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் பணியாற்றுவதற்கும் அனுமதிக்க வேண்டும்.

இந்த முகாம்களுக்கு செல்லும் முழு அதிகாரங்களும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் போன்றவற்றுக்கு வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் நடைபெற்று வரும் நீண்டகாலப் போருக்கு படைத்துறை ரீதியாக தீர்வுகாண முடியாது. விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டு ஆயுதங்களை கீழே போட வேண்டும்.

எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளது.

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். துணை இராணுவக் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

போரை நிறுத்த பான் கி மூன் வலியுறுத்தல்

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனும் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

வன்னிப் பகுதியில் மோதல்களில் சிக்கி பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் கொண்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக அங்கு நடைபெற்று வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார் அவர்

நன்றி: வணக்கம்மலேசியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக